Sunday, January 5, 2014

புவனக்காடு – திரைவிமர்சனம்

www.sudarcinema.com

நடிகர் : விக்னேஷ்
நடிகை : திவ்யா நாகேஷ்
இயக்குனர் : வி.எம்.மோகன்
இசை : ரவி ஸ்வாமி
ஓளிப்பதிவு : சரத் பிரியதேவ்

விக்னேஷும், திவ்யா நாகேஷும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் சாலையில் விக்னேஷ் தனது குழந்தையை கூட்டிக் கொண்டு போகும்போது, நிழல்கள் ரவி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி, அவரது குழந்தையை கடத்திச் சென்றுவிடுகிறார்.
அந்த ஊரின் மிகப்பெரிய செல்வந்தரான ராயல் ராஜ் என்பவரின் குழந்தையை கடத்திக் கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைத்துவிட்டு, உனது குழந்தையை கூட்டிச்செல் என்று நிழல்கள் ரவி, விக்னேஷுக்கு நிபந்தனை விதிக்கிறார். நிழல்கள் ரவியின் மகள் பெரிய இடத்தில் திருமணம் செய்துகொடுத்து வரதட்சணை கொடுமையால் இவரது வீட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறாள். அதனால், அந்த வரதட்சணையை கொடுப்பதற்காக நிழல்கள் ரவி இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார்.
நிழல்கள் ரவி கூறிய நிபந்தனையை ஏற்க விக்னேஷுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆகவே, போலீசிடம் சென்று தன்னுடைய குழந்தையை நிழல்கள் ரவி கடத்தியதை கூறி முறையிடுகிறார். போலீஸ் குழந்தையை மீட்பதற்காக புதிய திட்டம் வகுக்கிறது. போலீஸ் ஒருவரை மூட்டையில் கட்டி, நிழல்கள் ரவி சொன்ன இடத்தில் கொண்டு வைப்பது என முடிவெடுத்து அதன்படி திட்டத்தை செயல்படுத்துகின்றனர். ஆனால், செல்வந்தரின் மகளை யாரோ ஒருவர் கடத்திக் கொண்டுப் போய்விடுகிறார். விக்னேஷ்தான் கடத்தினார் என்று போலீஸ் சந்தேகப்பட்டு அவரை ஜெயிலில் அடைக்கிறது. அங்கிருந்து விக்னேஷ் தப்பிக்கிறார்.
இறுதியில் போலீஸ் கையில் விக்னேஷ் அகப்பட்டாரா? செல்வந்தரின் மகளை கடத்தியது யார்? விக்னேஷின் மகள் மீட்கப்பட்டாளா? என்பதே மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். குழந்தையை விட்டுவிடு என நிழல்கள் ரவியிடம் இவர் கதறி அழும் காட்சி நம்மையும் அழவைக்கிறது. வலுவான கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திவ்யா நாகேஷ் அழகாக இருக்கிறார். விக்னேஷிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகட்டும், அதன்பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை காதல் புரிவதாகட்டும் அழகாக நடித்திருக்கிறார். குடும்பப் பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நிழல்கள் ரவி அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளாக வருபவர்களும் அழகாக நடித்திருக்கிறார்கள்.
கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் இயக்குனர் ஒழுங்காக சொல்லிருக்கலாம். பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், காட்சிக்கு தகுந்தாற்போல் பாடல்களை அமைக்காமல் தேவையற்ற இடத்தில் பாடல்களை புகுத்தி கதையின் ஓட்டத்தை சீர்குலைத்திருக்கிறார். பெரிய நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், இயக்குனர் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிட்டார். காமெடி என்ற பெயரில் சிரிப்பை வரவழைக்காமல் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு சுமார்தான்.
இப்படத்தின் இயக்குனர் வி.எம்.மோகன் இதுவரை சினிமாவில் எந்த துறையிலுமே இருந்ததில்லை, சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை ஏன் ஷூட்டிங் கூட பார்த்ததில்லை என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்களிடையே படத்தின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட இயக்குனர் நிவர்த்தி செய்யவில்லை.
மொத்தத்தில் ‘புவனக்காடு’ குழப்பம்.






No comments:

Post a Comment